TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

சதீஷின் பரதம்

சென்னை... நவம்பர்...22

சங்கராபரண டிரஸ்டின் ஆதரவில் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. இதில் உடுப்பி லட்சுமி நாராயணனின் மாணவன் சதீஷ் என்கிற 12 வயது சிறுவன் பரதநாட்டியம் ஆடி, பார்வையாளர்களை கவர்ந்தான்.

ஊத்துக்காடு வெங்கடசுப்பய்யரின் "ஆனந்த நர்த்தன கணபதிம்", இதில் விநாயகரின் பல நிலைகளையும் ஆடியதை அடுத்து மூகாம்பிகை மீது "கிருஷ்ணன் குட்டி" இயற்றியுள்ள ராகமாலிகையில் மூகாம்பிகையின் பெருமையை விளக்கும் வகையில் ஆடினான்.

மேலும் குரு லட்சுமி நாராயணன் இயற்றிய ஷண்முகப்ரியா வர்ணம் "தயாநிதே" முருகனின் ஆறுபடை வீட்டையும் விவரித்து, குரு லட்சுமி நாராயணனின் உயர்தரமான

ஜதிகளை நல்ல தாளக்கட்டுடன் ஆடினான்.

பிரம்மனை சிறையில் அடைத்து சிவனுக்கு "ஓம்காரத்தை" உபதேசம் செய்யும் முருகன், மற்றும் வள்ளியை விருத்தனாக, வேடனாக வந்து மணந்த இடங்களை சஞ்சாரி பாவங்களுடன் உணர்ச்சி பூர்வமாக ஆடினான்.

புரந்தரதாசரின் வாழ்க்கை தத்துவத்தை புரிய வைக்கும் பாடல் "இன்னும் தய பாரதே" நன்றாக இருந்தது. இவரைத் தவிர வியாசராயா, ஷ்ரீபாதராயா ஆகியோர் கிருஷ்ண லீலைகள், மற்றும் தேவர்களின் நாமங்கள் பற்றி இயற்றியுள்ளனர்.

லட்சுமி நாராயணன் மற்றும் மதுமதியின் நட்டுவாங்கமும், மங்கள பாரதியின் பாட்டும் உயர்தரமாக இருந்தது.


சுதாராணியின் 50 ஆண்டுகால நாட்டியப்பணி

சென்னை... அக்டோபர்...25

பத்மஷ்ரீ சுதாராணி, நாட்டிய பணியில் 50 ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் நாட்டிய மேதை மட்டுமல்ல, மைசூர் பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்திலும் நாட்டியக் கலையை பற்றி படித்து ஆராய்ச்சியும் செய்துள்ளார்.

இவரின் முதல் நடனநிகழ்ச்சி 1947-ம் ஆண்டு ஊட்டியில் நடைபெற்றது. அப்போது இவருக்கு வயது மூன்றரை. புகழ்பெற் ற நடன ஆசிரியர்கள் கிருஷ்ணராவ், தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளை ஆகியோரிடம் நடனக்கலையையும், வித்வான் மதுரை கிருஷ்ணனிடம் சங்கீதமும் பயின்றுள்ளார்.

தம்முடைய 50 வருட பரதநாட்டிய வாழ்க்கையை கொண்டாடும் வகையிலும், சுதந்திர பொன்விழாவை முன்னிட்டும் சென்ற 17,18,19 ஆகிய தேதிகளில் நாரதகான சபாவில் பரதநாட்டிய விழாவை கோலாகலமாக நடத்தினார். இவ்விழாவில் நடனத்தில் சிறந்து விளங்கிய நாட்டிய மணி, நடன ஆசிரியர்கள், கலை விமர்சகர்கள் ஆகியோருக்கு ஷ்ரீபரதாலயா சார்பில், சுதாராணி பட்டங்கள் கொடுத்து அவர்களை கௌரவித்தார்.

முதல் நாளான 17-ம் தேதியன்று பிரீதா முத்தண்ணா, "சிலம்பம்" கலைஞர்கள் மற்றும் லாவண்யா ஆகியோரின் நடனம் அருமையாக இருந்தது.

மூன்று அகில உலக புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர்கள் சுதா ராணி ரகுபதி, சித்ரா விஸ்வேஸ்வவரன் மற்றும் பத்மா சுப்பிரமணியம் சேர்ந்து "விராலிமலை குறவஞ்சி"யை அற்புதமாக ஆடினர்.

இதில் சுதாராணி ராஜமோகினியாகவே மாறி விராலிமலை சுப்பிரமணிய சுவாமி மீது தான் கொண்டிருக்கும் காதலை தோழியிடம் வெளியிடும் விதம் அபாரம். சித்ரா விஸ்வேஸ்வரன், சொல் கட்டுகளுக்குகேற்றாற் போல் விறுவிறுப்பாக ஆடி ராஜமோகினிக்கு யோசனை கூறுவது மிக நன்றாக இருந்தது. பத்மா சுப்பிரமணியம் குறத்தியாக வந்து தம்முடைய நாட்டியத்தினால் ரசிகர்களை கவர்ந்தார். அனிருத்தனின் மிருதங்கம், பத்மா ராஜகோபாலனின் நட்டுவாங்கம், விஸ்வேடஸ்வரன் பாட்டு ஆகியவை நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தின.

Back   Next   Top