TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

இசை

கண்ணீர் விடவைத்த கானம்

நிகழ்ச்சியின் துவக்கத்தில் மோகன ராகத்தில் வர்ணத்தை பாடிய பட்டம்மாள், அங்கிருந்து அந்தோலிக்காவில் ராகசுதரசத்தை இசைத்தார். கல்யாணியில் தில்லை நின்னுவும், தோடியில் நன்னு புரோச்சுதாக்குவும், பாரதியின் பாருக்குள்ளே நல்லநாடு மத்தியமாவதியிலும் பட்டம்மாளின குரலில் களிநடம் புரிந்தன.

பின்னர் ராகமாளிகா விருதத்தில் கேதரகௌலாவில் "புள்ளை பிறந்தாலும்" என்ற பாடலை பட்டம்மாள் பாடிய போது அதன் இசையில், நேர்த்தியில், லயத்தில் உருகி அவரும் அழுதார். இசைகேட்க கூடியிருந்தவர்களையும் கண்ணீர் விடவைத்துவிட்டார். தனது இளமைக்காலத்தில் தனக்கு

மிகவும் புகழைத்தேடித்தந்த மகாகவி பாரதியின் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே"யையும், முடிவில் பாரத விடுதலையின் பொன்விழாவைக்குறிக்கும் "சாந்தி நிலவவேண்டும்" என்ற கீதத்தையும் அவர் இசைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வயலின் வாசித்த ஷ்ரீராம்குமாரின் திறனும், மிருதங்கத்தை வாசித்த சிவகுமாரின் வாசிப்பும் போற்றும் படியாக இருந்தது.

கச்சேரி முடிந்து வெளியே வந்தவர்கள், நீண்டகாலம் கழித்து ஆத்ம திருப்தி அளித்த சங்கீதத்தை கேட்ட மனநிம்மதியுடன் வந்தார்கள் என்று கூறினால் அதனை மறுப்பதற்கு எவருமில்லை.


தியாகராஜ சங்கீதத்தின் 150-வது இசை நிகழ்ச்சிகள்

சென்னை... ஆகஸ்ட்...4

புகழ்பெற்ற சங்கீத வித்வான் சத்குரு ஷ்ரீதியாகராஜ சுவாமிகளுடைய 150-வது ஆராதனை இசை நிகழ்ச்சிகள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன. சத்குரு தியாகராஜ சுவாமிகளின் சந்நிதானத்தில் இவை சிறப்பான ஒலி அமைப்புகளோடு நேர்த்தியான விதத்தில் நடந்து வருவது பாராட்டத்தக்க.

இந்த நிகழ்ச்சிகளை பிரபல சங்கீத வித்வான் சீர்காழி ஜெயராமன் சிறப்பாக முன்னின்று கவனித்து வருகிறார். சமீபத்தில் இந்த இசை நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக மறைந்த சாத்தூர் ஏ.ஜி.சுப்பிரமணியத்தின் 82-வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் அவருடைய புதல்வி லட்சுமி சுந்தரத்தின் இசை நிகழ்ச்சி இடம் பெற்றது.

லட்சுமி சுந்தரத்தின் மதுரமான குரல் கேட்போரை பரவசப்படுத்தியது. ஒவ்வொரு கிருதியும் கட்டுக்கோப்பாக திட்டமிட்டு வழங்கப்பட்டது. ஏகதந்தம், கீதவாத்திய, ஷ்ரீசங்கர குருவரம் மற்றும் ஸ்வரகோர்வைகள் இவற்றுடன் புஷ்ப மழை பொழிந்தது போன்ற மலைய மாருத ராக ஆலாபனை கேட்பவர் செவிகளில் விவரிக்க முடியாத இனிய ரசத்தை பொழிந்தது என்றால் அது மிகையில்லை. தான் ஒரு மிகத்திறமையான பாடகி என்பதை லட்சுமி சுந்தரம் அழுத்தமாக இந்த கச்சேரியில் மீண்டும் நிரூபித்தார்.

பக்க வாத்தியத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் வாசிப்பு நயமாகவும், பாலச்சந்தரின் மிருதங்கம் வளமாகவும் இருந்தது.

Back    Next    Top