TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

இசை

தியாகராஜ சங்கீதத்தின் 150-வது இசை நிகழ்ச்சிகள்

சென்னை... ஆகஸ்ட்...4

புகழ்பெற்ற சங்கீத வித்வான் சத்குரு ஷ்ரீதியாகராஜ சுவாமிகளுடைய 150-வது ஆராதனை இசை நிகழ்ச்சிகள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன. சத்குரு தியாகராஜ சுவாமிகளின் சந்நிதானத்தில் இவை சிறப்பான ஒலி அமைப்புகளோடு நேர்த்தியான விதத்தில் நடந்து வருவது பாராட்டத்தக்க.

இந்த நிகழ்ச்சிகளை பிரபல சங்கீத வித்வான் சீர்காழி ஜெயராமன் சிறப்பாக முன்னின்று கவனித்து வருகிறார். சமீபத்தில் இந்த இசை நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக மறைந்த சாத்தூர் ஏ.ஜி.சுப்பிரமணியத்தின் 82-வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் அவருடைய புதல்வி லட்சுமி சுந்தரத்தின் இசை நிகழ்ச்சி இடம் பெற்றது.

லட்சுமி சுந்தரத்தின் மதுரமான குரல் கேட்போரை பரவசப்படுத்தியது. ஒவ்வொரு கிருதியும் கட்டுக்கோப்பாக திட்டமிட்டு வழங்கப்பட்டது. ஏகதந்தம், கீதவாத்திய, ஷ்ரீசங்கர குருவரம் மற்றும் ஸ்வரகோர்வைகள் இவற்றுடன் புஷ்ப மழை பொழிந்தது போன்ற மலைய மாருத ராக ஆலாபனை கேட்பவர் செவிகளில் விவரிக்க முடியாத இனிய ரசத்தை பொழிந்தது என்றால் அது மிகையில்லை. தான் ஒரு மிகத்திறமையான பாடகி என்பதை லட்சுமி சுந்தரம் அழுத்தமாக இந்த கச்சேரியில் மீண்டும் நிரூபித்தார்.

பக்க வாத்தியத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் வாசிப்பு நயமாகவும், பாலச்சந்தரின் மிருதங்கம் வளமாகவும் இருந்தது.

Top


சபாக்கள் : நாரத கான சபா

சென்னையில் உள்ள புகழ்மிக்க சபாக்களுள் நாரத கான சபாவும் ஒன்று. 9.2.1958-ம் ஆண்டு மயிலை மக்களால் துவக்கப்பட்ட இந்த சபா கர்நாடக சங்கீதத்தின் வளர்ச்சிக்கு குறிப்பாகவும், இந்திய இசை மற்றும் கலைகளின் வளர்ச்சிக்கு பொதுவாகவும் பெரும் தொண்டாற்றி வருகிறது. துவக்கத்தில் 200 உறுப்பினர்களுடன் துவக்கப்பட்ட இந்த சபாவில் தற்போது 888 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

Yesudoss  நாரத கான சபாவில் தமிழகம் மட்டும் இல்லாமல் உலக அளவிலும் புகழ் பெற்ற கர்நாடக இசை கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி, அரியங்குடி ராமானுஜ ஐயங்கார், மதுரை மணி ஐயர் போன்றவர்களும், ஹிந்துஸ்தானி இசையில் கொடி கட்டி பறக்கும் ஜாம்பவான்களான பண்டிட் ரவி சங்கர், உஸ்தாத் பிஸ்மில்லாகான், அம்ஜத் அலிகான், பர்வின் சுல்தானா ஆகியோர் தங்கள் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நிகழ்த்தி வருகின்றனர்.

M.S.Subbalakshmi  நாரத கான சபாவின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் 1983-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்பாக நடைபெற்றன. புகழ்பெற்ற கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதுடன், இசை துறையில் காலடி எடுத்து வைக்கும் இளம் வயதினருக்கும் இந்த சபா அற்புதமான வாய்ப்புகளை நல்கி வருகிறது.

பரதநாட்டியத்தை மேம்படுத்துவதற்காக 1995-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாட்டிய அரங்கம் என்ற ஒரு திட்டம் துவக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 3-வது சனிக்கிழமைகளில் பரதநாட்டியத்தின் நுட்பங்களை விவரிக்கும் சொற்பொழிவுகளும், செயல்முறை விளக்கங்களும் நிகழ்த்தப்படுகின்றன. அனுபவம் மிக்க பரதநாட்டிய கலைஞர்கள் இவற்றை செய்கின்றனர்.

இது தவிர கர்நாடக இசையில் உயர்கல்வி அளிப்பதற்கான பாடத்திட்டம் ஒன்றும் நாரத கான சபாவில் துவக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் சங்கீத விழாக்கள் சிறப்பாகவும், சீராகவும் நாரத கான சபாவில் நடைபெற்று வருகின்றன. இந்திய இசையின் வளர்ச்சிக்கு பெரும் உதவி புரிந்த மிக பிரசித்தி பெற்ற சுவாதி திருநாள் போன்றவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றன.

ஆண்டு தோறும் தேவார மூவர் இசை கலை விழா சபாவில் சீரோடு கொண்டாடப்படுகிறது. இசைப்போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

எதிர்காலத்தில் கர்நாடக இசையின் வளர்ச்சிக்கு தாங்கள் தொடர்ந்து பணியாற்ற போவதாக இச்சபாவின் நிர்வாகிகள் உறுதிபட கூறுகின்றனர்.

Back    Next    Top