எய்ட்சை
கட்டுப்படுத்த அழகு நிலையங்களில் கண்காணிப்பு
புதுதில்லி... ஜனவரி...21
இந்தியாவில் எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுத்து நிறுத்த
அழகு நிலையங்கள் (பியூட்டி பார்லர்), முடிவெட்டும்
நிலையங்கள், பல் மரு த்துவ நிலையங்கள் ஆகியவற்றில்
தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள முடிவு
செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் புது தில்லியில்
நடைபெற்ற மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ்
இயங்கும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின்
பயிலரங்கு ஒன்றில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டது. மேலே
குறிப்பிட்ட இந்த இடங்கள் எய்ட்ஸ் நோயை
பரப்புவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்வதாக
அஞ்சப்படுவதால், இவற்றில் தீவிர கண்காணிப்பை
மேற்கொள்ளுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த
நிலையங்களில் கடுமையான தரக்கட்டுப்பாடுகளை, சுகாதார
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்படுத்துவது எய்ட்ஸ்
நோய் பரவாமல் தடுக்கும் முயற்சிகளில் முக்கியமானதொரு
அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.
கிராமங்களில்
விழிப்புணர்வு
இந்த தேசிய பயிலரங்கில்
மேற்கொள்ளப்பட்ட மற்றொரு முக்கிய முடிவு எய்ட்ஸ்
நோய் பற்றிய விழிப்புணர்வை நகர்ப்புறங்களில்
மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் விரிவுப்படுத்துவது
என்பது. ஏனெனில் இந்தியாவில் நகர்ப்புறங்கள்
தற்போது தொடர்ச்சியான எய்ட்ஸ் விழிப்புணர்வு
பிரச்சாரத்தின் கீழ் இருந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், நாட்டின் கிராமங்களில் இந்த விழிப்புணர்வு
தேவையான அளவு பரவாவதது, நாட்டின் சுகாதார
நிபுணர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே
நிலையை சமாளிக்கவும், இந்தியாவின்
கிராமப்புறங்களிலும் பெருகிவரும் எய்ட்ஸ் நோய்
குறித்த விழிப்புணர்ச்சியை, எளிய வழிமுறைகளின் மூலம்
கிராமப்புற மக்களிடையே பரப்புவது என்றும் முடிவு
செய்யப்பட்டுள்ளது. மேலும் தனிப்பட்ட முறையில்
எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகக்கூடியவர்களிடம் கவனம்
செலுத்துவதும் , அவர்களிடம் பிரச்சாரத்தை
மேற்கொள்ளுவது அவசியமாகும் என்றும் முடிவு
செய்யப்பட்டுள்ளது.
தொண்டு நிறுவனங்களில் பங்கு
இந்த பயிலரங்கில்
தெரிவிக்கப்பட்ட மற்றொரு முக்கிய அம்சம் எய்ட்ஸ்
நோயை ஒரு தேசிய சுகாதார பிரச்சினையாக மட்டும்
கருதாமல், அதனை நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம்
ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையாக கருதவேண்டும் என்பது தான்.
எய்ட்சை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நாடு முழு
வதிலும் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு போதிய
உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அளிக்கவேண்டும்
என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது . இதுவரை தொண்டு
நிறுவனங்களிடம் அரசு காட்டி வரும் அணுகுமுறை மனநிறைவு
தருவதாக இல்லையென்று பயிலரங்கில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் தொண்டு
நிறுவனங்களுக்கு தேவைப்படும் நிதியுதவியை அளிப்பதில்
மேற்கொள்ளும் காலதாமதம் எய்ட்ஸ் விழிப்புணர்வு
பணிகளை பாதிப்பதாக கூறப்பட்டது. மொத்தத்தில்
சொல்லுவதென்றால் இந்தியாவில் அபாயகரமான அளவில்
பரவிவரும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதில் புதிய
அணுகுமுறைகளை இந்த பயிலரங்கு விவாதித்தது என்று கூறலாம்.
ஆனால் எடுக்கப்பட்ட முடிவுகள் நாடு இந்த சவாலை
சந்திப்பதற்கு உதவி புரியுமா என்பதை வரயிருக்கும்
மாதங்கள் தெளிவுபடுத்தியுள்ளது.
Top |
|