கருவிலேயே
குழந்தையின் `ஐ'க்யூவை அதிகரிக்கலாமா?
சென்னை... ஆகஸ்ட்...2
கருவிலிருக்கும் பொழுதே குழந்தையின் மூளை வளர்ச்சியை
அதிகரிக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் தற்பொழுது
ஆராய்ந்து வருகின்றனர். இது தொடர்பாக, அமெரிக்காவின்
பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்
பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானியான பெர்னார்டு
டெவிலின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட
ஆராய்ச்சி பல சுவாரஸ்யமான தகவல்களை வெளிக்கொண்டு
வந்திருக்கிறது.
இது தவிர `ஐ'க்யூ எனப்படும் மனிதர்களின்
புத்திசாலித்தனத்தின் அளவும் குழந்தை கருவிலிருக்கும்
பொழுதே வடிவமைக்கப்ப டுவதாகவும் ஆராய்ச்சியில்
தெரியவந்துள்ளது. கருவுற்றிருக்கும் பெண்கள் மது அருந்துவது,
புகை பிடிப்பது, போதிய சத்தான உணவை உண்ணாமல் இருப்பது
ஆகியவை குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும்
என்பது நாமறிந்தது தான். ஆனால் இதற்கும், பிறக்கும்
குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கும் உள்ள
தொடர்பை, குழந்தையின் `ஐ'க்யூவிற்கு உள்ள தொடர்பை
இதுவரை விஞ்ஞான பூர்வமாக ஆதாரத்துடன் எவரும்
நிரூபிக்கவில்லை.
மரபியல் கூறுகள்
காரணமல்ல
குழந்தைகளின் புத்திசாலித்தனம்
பற்றி, இதுவரை மேற்க்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள்
மரபியல் ரீதியான காரணங்களுக்கே அதிக முக்கியத்துவம்
கொடுத்தனர். மரபு ரீதியாகவே புத்திசாலித்தனம்
தீர்மானிக்கப்படுவதாக பல ஆராய்ச்சியாளர்கள் இதுவரை
கூறிவந்தனர். ஆனால் பெர்னார்டு டெவ்லின் தலைமையிலான
ஆராய்ச்சிக்குழு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
இரட்டை குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில்,
பழைய கருத்தோட்டம் தவறானது என்று தாங்கள்
கண்டறிந்துள்ளதாக கூறுகிறது. தாயின் கருப்பையில்
இருக்கும் பொழுதே குழந்தையின் புத்திசாலித்தனம்
முக்கிய அளவுக்கு தீர்மானிக்கப்படுவதாக தங்களது ஆய்வு
உணர்த்துவதாக, டெவ்லின் உறுதிப்பட கூறுகிறார்.
சாதனையாளர் என்று கூறப்படுபவர்களின் மூன்றாவது அல்லது
நான்காவது தலைமுறையினர், சாதாரண மனிதர் ஒருவரின்
மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறையினரின் `ஐ'க்யூவையே
பெற்றிருக்கிறார்கள் என்றும் டெவ்லின் தனது
கண்டுபிடிப்புக்கு ஆதாரமாக தருகிறார்.
குழந்தைகளின் புத்திசாலித்தனத்திற்கு
உணவுப்பழக்கங்கள், பிறக்கும்பொழுது இருக்கும்
குழந்தையின் எடை ஆகியவற்றை முக்கிய காரணங்களாக
கூறுகின்றார் டெவ்லின். எனினும் குழந்தைகளின் `ஐ'க்யூ
உருவாவது குறித்த விஷயத்தில் இன்னமும் ஏராளமான மருத்துவ
ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம்என்றும்
அவர் சொல்கிறார்.
கருவிலேயே சாத்தியமா?
தாயின் வயிற்றில் குழந்தை உள்ள
போதே, மருந்துகளைப்பயன்படுத்தி குழந்தையின் மூளை
வளர்ச்சியை அதிகரிக்க செய்யமுடியுமா என்பது குறித்தும்
ஆய்வுகள் நடைபெற்றுவருவதாக, டெவ்லின் கூறுகிறார்.
கருவிலேயே இதனை செய்யமுடிந்தால், முழு சமூகத்தின் ஒட்டு
மொத்த மூளை வளர்ச்சி வானளவு உயரும் என்றும்அவர்
கருதுகிறார். ஆனால் நடைமுறையில் இது உடனடியாக சாத்தியமா
என்பது போகப்போகத்தான் தெரியும்.
Top |