54 வயதில் டெஸ்ட் டியூப் மூலம்
குழந்தை பெற்ற பெண்
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
என்பார்கள். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்
என்பது பழந்தமிழ் மொழி. இந்த வாக்கியத்தை
பிரிட்டிஷ் பெண்மணி ஒருவர் சில தினங்களுக்கு முன்பு
நிருபித்து காட்டியிருக்கிறார். 54 வயதில் டெஸ்ட் டியூப்
முறையில் இரட்டை குழந்தைகளை இந்த பிரிட்டிஷ் பெண்மணி
பெற்றெடுத்தார். இங்கிலாந்தில் அதிக வயதில் டெஸ்ட்
டியூப் முறையில் குழந்தை பெற்ற பெண்மணி என்ற புதிய
சாதனையை அவர் இதன் மூலம் படைத்திருக்கிறார்.
வயது வரம்பு
1980-ம்
ஆண்டுகளின் மத்தியில் உலகில் முதல் டெஸ்ட் டியூப்
குழந்தை பிறந்தது. இங்கிலாந்தை பொறுத்தவரையில்
இவ்வாறு டெஸ்ட் டி யூப் முறையில் குழந்தை பெற்றுக்
கொள்ள விரும்பும் பெண்மணிகளுக்கு 45 முதல் 50 வயதிற்கு
மேல் இருக்கக்கூடாது என்று நடைமுறையில் ஒரு விதியினை
மருத்துவர்கள் வைத்துள்ளனர்.
ஆனால் இதனை சில மருத்துவர்கள் ஏற்றுக்
கொள்ளவில்லை. குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு
இரட்டை குழந்தையை பெற்ற பிரிட்டிஷ் பெண்மணியான
எலனார் ஆம்ஸ்ட்ராங் பெர்ல்மணின் மருத்துவரான
பேராசிரியர் அயர்ன் கிராஃப்ட் இந்த வயது வரம்பை
எதிர்க்கிறார். செயற்கை முறையில்
கருத்தரிக்கவிரும்பும் பெண்களுக்கு வயது ஒரு தடையாக
இருக்கக்கூடாது என்று அவர் தெரிவிக்கிறார். இதே
மருத்துவர் 2 வருடங்களுக்கு முன்பு 52 வயதான மற்றொரு
பிரிட்டிஷ் பெண்ணுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க
மருத்துவ ஆலோசனை வழங்கி அப்பெண்மணி குழந்தை பெற்றுக்
கொள்ளவும் உதவி புரிந்தார்.
ஆனால் வயது வரம்பு எதுவும் பெண்களுக்கு சட்டபடி
விதிக்கப்பட வில்லை.
மருத்துவரின்
ஐயப்பாடு
நடைமுறை
சிக்கல்களை கருத்தில் கொண்டு தாயின் உடல்நலனையும்
குழந்தையின் நலனையும் கருத்தில் கொண்டு மருத்துவர்கள்
45 முதல் 50 வயது வரை என்று இதற்கு நிர்ணயித்துள்ளதாக
பிரிட்டிஷ் மருத்துவர்கள் கூறுகின்றனர். 1994-ம் ஆண்டில்
இங்கிலாந்தில் 25,000 பெண்களுக்கு செயற்கை முறையில்
கருத்தரிக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 338
பெண்கள் 45 வயதை கடந்தவர்களாக இருந்தனர். இந்த 45
பெண்களில் 41 பெண்களுக்கு குழந்தைகள் பிறந்தன.
மாதவிடாய் நின்று போன பிறகு கருத்தரிக்க சிகிச்சை
அளிப்பதில் கருமுட்டைகள் சரியாக வளர்ச்சியடையாது
என்பது தான் மருத்துவர்களின் எண்ணமாகும்.
20 முதல் 30 வயதுக்குள் இருக்கும் ஓர் ஆணின் விந்தணுக்களை
60 வயதைக் கடந்த பெண்களின் கருப்பைகளில் வைத்து
குழந்தைகளை உருவாக்கமுடியும் என்றும், எல்லினார்
ஆம்ஸ்ட்ராங் பெர்ல்மனுக்கு சிகிச்சை அளித்த
மருத்துவர் கிராஃப்ட்டின் வாதமாகும்.
எதிர்ப்பு
எனினும் ஐரோப்பாவில்
சாதாரணமாகவே 50 வயதிற்கு மேல் பெண்கள் செயற்கை
முறையில் குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு கடும்
எதிர்ப்பு நிலவுகிறது. சில வருடங்களுக்கு முன்பு
இங்கிலாந்தின் அலிசான் காப் என்ற 59 வயது பெண்மணி
செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவ
சிகிச்சை பெற்று வந்தார். அதே காலகட்டத்தில்
இத்தாலி நாட்டில் 59 வயதில் இரட்டைக் குழந்தையை
செயற்கை முறையில் ஒரு பெண் பெற்றெடுத்தார். இதற்கு
ஐரோப்பா முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால்,
அலிசான் காபின் குழந்தை பெறும் முயற்சி பாதியில்
நின்று போனது. ஆனால் ஐரோப்பாவின் இந்த எதிர்ப்பை
பொருட்படுத்தாமல், தந்திரமாக 63 வயதில் பெண் குழந்தை
ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்சிலி கே என்ற
பெண்மணி பெற்றுக் கொண்டார். செயற்கை கருத்தரிப்பு
மையத்தின் தன்னுடைய வயதை 53 என்று கூறி அவர் தன்
காரியத்தை சாதித்துக் கொண்டார்.என்ன இருந்தாலும்
பிரிட்டிஷ் பெண்களை விட அமெரிக்க பெண்கள் சாதுர்யம்
மிக்கவர்கள் அல்லவா?
Top |