TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

லெனின் உடல் புதைக்கப்படுமா?

- ரஷ்யாவில் வாக்கெடுப்பு

ரஷ்ய புரட்சியின் தலைவரும், உலக கம்யூனிஸ இயக்கத்தின் ஒப்பற்ற தலைவருமான லெனினின் பூத உடல் விரைவில் அது வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழையிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு மண்ணில் புதைக்கப்படும் என்று தெரிகிறது. 1924-ம் ஆண்டு இறந்த லெனின் பொருட்களால் பதப்படுத்தப்பட்டு குண்டு துளைக்காத கண்ணாடி பேழையினுள் வைக்கப்பட்டது. கடந்த 73 ஆண்டுகளாக மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தின் நடுவே லெனின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாஸ்கோ செல்லும் வெளிநாட்டுப் பயணிகளும், ரஷ்ய குடிமக்களும் ஆயிரக்கணக்கில் தினந்தோறும் லெனின் உடலை பார்ப்பதற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலைமை விரைவில் மாறிவிடும் என்று தெரிகிறது. ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ஸ்டின், லெனினின் பூத உடலை வெளியில் எடுத்து கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யவேண்டும் என்று சமீபத்தில் கூறியிருக்கிறார்.

இதற்காக நாடு தழுவிய கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் சொல்லுகிறார். கடந்தாண்டு இதே போன்று எல்ஸ்டின் கூறிய போது, அதற்கு ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான டூமா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த கீழ்சபையில் கம்யூனிஸ்ட்கள் பெரும்பான்மையில் உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு லெனினின் பூத உடலுக்குதினமும் வழங்கப்பட்டு வந்த இராணுவ மரியாதையையும் எல்ஸ்டின் நிறுத்தி விட்டார். செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் லெனின் தனது உடல் புதைக்கப்பட வேண்டும் என்று விரும்பியதாகவும், அதனை தற்பொழுது தான் நிறைவேற்றப் போவதாகவும் எல்ஸ்டின் தம்மை சந்தித்த ஒரு குழுவினரிடையே கூறியிருக்கிறார்.


"பிணத்தினைப் போற்றேல்" என்பது மகாகவி பாரதியின் வாக்கு. மூட நம்பிக்கைகளை, கடவுள் நம்பிக்கையை எதிர்த்து போராடும் புரட்சி வாதிகள் தங்கள் தலைவரின் பூத உடலை பூமியில் புதைக்க எதிர்ப்பு தெரிவிப்பது ஒரு வித மூட நம்பிக்கை அல்லவா? என்று இது தெரிவிக்கிறார், தமிழ்நாட்டின் சுய சிந்தனை உள்ள கம்யூனிஸ்ட் தொண்டர் ஒருவர். லெனின் என்பது என்ன?
வெறும் பூத உடலா? அவரது சிலைகளா? அல்லது அவரது சிந்தனைகளை செயல்படுத்த நாம் எடுக்கும் முயற்சிகளா?
நிச்சயமாக லெனினின் பூத உடலுக்காக போராடுவது மூடநம்பிக்கை என்றும், அவரது கொள்கைகளை செயல்படுத்த பாடுபடுவது தான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி என்கிறார், அந்த கம்யூனிஸ்ட் தொண்டர்.

Top