உயிருக்கு
போராடும் போதும்
ஓவியத்தில் ஓயாத ஆர்வம்
முன்னாள் பாரத பிரதமர்
வி.பி.சிங் சிறுநீரக கோளாறுக்காக லண்டனில் தங்கி
தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு
நாட்களுக்கு ஒருமுறை அவருக்கு சிறுநீரை பிரிப்பதற்கான
டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மிகவும்
சோர்வடைந்து காணப்படும் வி.பி.சிங் தன்னுடைய
உற்சாகத்தை மட்டும் இழந்தவராக இல்லை. படுக்கையில்
இருந்து கொண்டே லண்டன் மாநகரின் வாழ்க்கையின்
பல்வேறு அசைவுகளை ஓவியமாக அவர் தீட்டிவருகிறார். தன்
கையில் வைத்திருக்கும் சிறிய வீடியோ கேமிரா மூலம்
லண்டன் நகரின் பல்வேறு அசைவுகளை, தனது படுக்கை
அறையிலிருந்தே அவர் படம் பிடித்துக்
கொண்டிருக்கிறார்.
அதே போன்று பல்வேறு தரப்பு மக்களின்
முகபாவங்களையும் அவர் உன்னிப்பாக கூர்ந்து
கவனிக்கிறார். "மிகச்சிறந்த ஓவியனுக்கு தன்னை
சுற்றியுள்ள மனிதர்களின் மனோபாவங்களை அறிந்து
கொள்ளுவது மிகவும் முக்கியமானது. அப்பொழுது தான் அவனது
ஓவியத்தில் உண்மையும், எளிமையும் மிகுந்து,
அதுஉயிரோவியமாக ஒளிர முடியும்", என்கிறார்
வி.பி.சிங்.
ஓவிய
கண்காட்சிக்கு அழைப்பு
வி.பி.சிங்கின்
ஓவியங்களை லண்டனில் உள்ள புகழ் பெற்ற ஆர்க்ஸ் கேலரி
என்ற அமைப்பு கண்காட்சியாக வைக்க விருப்பம்
தெரிவித்திருக்கிறது. வரும் அக்டோபர் மாதத்தில்
இந்த கண்காட்சி அநேகமாக நடைபெறலாம் என்று தெரிகிறது.
தனித்தன்மை கொண்ட ஓவியங்களை மட்டுமே இந்த ஆர்க்ஸ்
கேலரி கண்காட்சியாக வைக்க முன்வரும். ஆனால் இன்னமும்
இந்தக் கண்காட்சியில் பங்கு பெறுவது குறித்து
வி.பி.சிங் இறுதி முடிவு எடுக்கவில்லை. உடல் ரீதியாக
தான் மிகவும் சோர்வடைந்திருப்பதாகவும், மருத்துவர்கள்
தான் ஓவியம் தீட்டுவதை விரும்பவில்லை என்றும் அவர்
கூறுகிறார். ஏனெனில் ஓவியம் தீட்டும் பொழுது மூளைக்கு
கொடுக்கும் வேலைகூட, ஓய்வு முழுமையாக தேவைப்படும் தனது
உடலுக்கு உகந்தது அல்ல என்று மருத்துவர்கள் கருதுவதாக
வி.பி.சிங் தெரிவிக்கிறார். தான் மிகவும் நேசிக்கும்
கவிதைகளை படிப்பதற்கு கூட தனக்கு முழு உடல்நலம் இல்லை
என்று அவர் கருதுகிறார். வரும் மாதங்களில் தனது உடல்
நிலை தேறுவதைப் பொறுத்தே இந்த ஓவியக்
கண்காட்சியில் தான் பங்கு பெறுவது முடிவு செய்யப்படும்
என்றும் வி.பி.சிங் தெரிவிக்கிறார்.
தனக்கு தங்களது சிறுநீரகத்தை
அளிக்க பல தரப்பு மக்கள் பாரதத்தில் முன்
வந்ததாகவும், இது தன்னை நெகிழ வைத்ததாகவும் வி.பி.சிங்
மேலும் கூறுகிறார்.
Top |