TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

சென்னையில் தற்கொலைகள் அதிகரிப்பு

இந்தியாவில் நிகழும் தற்கொலைகளில் சென்னை நகரம் முதலிடத்தை வகிக்கிறது. நாடு முழுவதும் நடக்கும் தற்கொலைகளில் 21.2 சதவிகிதம் சென்னையிலேயே நடப்பதாக சமீபத்தில் நடைபெற்ற ஓர் ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் பிரசித்தி பெற்ற உளவியல் நிபுணர்களான பார்வதி தேவியும், இன்ட்லா ரமா சுபா ரெட்டியும் இந்தியா முழுவதும் மேற்கொண்ட ஆய்விலிருந்து இந்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக பெங்களூரில், நாட்டில் நிகழும் தற்கொலைகளின் 21.1 சதவிகிதம் இருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகின்றது. மும்பையில்இது 14.06 சதவிகிதமாகவும், குறைந்த அளவாக ஜெய்பூரில் 1.4 சதவிகிதமாகவும் தற்கொலைகள் உள்ளதாக தெரியவந்திருக்கிறது.


1981-ஆம் ஆண்டில்
40,000 தற்கொலைகள் நிகழ்ந்ததாக
போலீஸ் அறிக்கை கூறுகிறது. இது
1993-ம் ஆண்டில்
84,000-ஆக உயர்ந்துள்ளது.


காரணங்கள்

இந்தியாவில் 6 நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் இவற்றிற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில், பரவலாக நாம் அனைவரும் நினைத்து கொண்டிருக்கும் வறுமை இந்த தற்கொலைகளுக்கு முக்கிய காரணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. நாட்டில் நிகழும் தற்கொலைகளில் 2.6 சதவிகிதத்தினர் தான் வறுமையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். சாதாரணமாக ஏழைகள் தங்களது வறுமை காரணமாக தற்கொலைக்கு போவதில்லை என்றும், தற்கொலையை ஒரு மாற்று வழியாக அவர்கள் கருதவில்லை என்றும் இந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கு முக்கிய காரணங்கள் நீடித்த மனக்கவலை,பொருளாதார ரீதியில் பாதுகாப்பற்ற தன்மை, செக்ஸ் பிரச்சனைகள் , கூட்டு குடும்பத்தினால் ஏற்படும் பிரச்சனைகள், விவாகரத்து, திருமண வாழ்வில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் சச்சரவுகள், பிரிவினால் ஏற்படும் மனபாதிப்புஆகியவை தற்கொலைக்கான பிரதான காரணங்களாக உள்ளதாக உளவியல் நிபுணர் பார்வதி தேவி கூறுகிறார்.

1981-ஆம் ஆண்டில் 40,000 தற்கொலைகள் நிகழ்ந்ததாக போலீஸ் அறிக்கை கூறுகிறது. இது 1993-ம் ஆண்டில் 84,000-ஆக உயர்ந்துள்ளது. தற்கொலை முயற்சிகள், இதே கால கட்டத்தில் 9 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. 1978-88-ஆம் ஆண்டுகளில் தற்கொலை புரிந்து கொள்ளுபவர்களின் எண்ணிக்கை 59 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவின் மக்கள் தொகை பெருக்க விகிதமான 29.8 சதவிகிதத்தை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

தடுக்கும் வழிகளும், எதிர்காலமும்

நிலைமையை மாற்ற உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று ஆய்வினை மேற்கொண்ட இந்த இரண்டு உளவியல் நிபுணர்களும் வற்புறுத்துகின்றனர். மருத்துவ கல்விலேயே தற்கொலை செய்து கொள்பவரின் மனப்போக்கை கண்டறியவும், அதனை தடுப்பதற்குமான பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். தங்களிடம் வரும் நோயாளிகளின் எண்ணப்போக்கினை உணரவும், அவர்களது பிரச்சனைகளுடன் அளவளாவவும் மருத்துவர்கள் முயற்சிகளை மேற்கொள்வது தற்கொலைகளை தடுக்க உதவும் என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை நிலைமையை ஓரளவாவது சீர்படுத்தஉதவும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

பத்திரிகைகளும் இந்த நிலைமையை சீர்படுத்த பெரிதும் உதவலாம் என்கிறார் மருத்துவர் இன்ட்லா ரமா சுபா ரெட்டி. பள்ளிகளில் உளவியல் பாடங்களை போதிப்பதன் மூலமும், பிரச்சனைகளுக்கு ஆலோசனை மூலம் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதும் அவசியமானது என்கிறார்ரமா சுபா ரெட்டி. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதில் பெரும் பங்கு ஆற்றமுடியும்.

ஆனால், இந்தியாவில் தற்பொழுது ஏற்பட்டு வரும் சமூக, பொருளாதார, கலாச்சார மாற்றங்கள் வரும் ஆண்டுகளில் நாட்டில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவு உயர்த்தும் என்று சமூகவியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். புதிய பொருளாதார கொள்கையும், எதையும் லாபத்தை கணக்கிலிட்டு செய்யும் எண்ணப்போக்கும், மாறிவரும் வாழ்க்கை மதிப்பீடுகளும், தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையை இந்திய சமூகத்தில் பன்மடங்கு அதிகரிக்க செய்யும் என்று அஞ்சப்படுகிறது.

Top