![]() |
TamilNadu Online INDIA'S FIRST INDIAN LANGUAGE WEB MAGAZINE |
Home |
|
|
||
வறுமையால் தாராளமயமாக்கத்துக்கு பின்னடைவு : உலகவங்கிவாஷிங்டென்... செப்டம்பர்...3 இந்தியாவில் நிலவும் வறுமையும், பெண்களின் தாழ்ந்த வாழ்க்கை நிலைமையும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார தாராளமயமாக்க கொள்கைகள் வெற்றி பெற பெரும் தடைக்கற்களாக உள்ளதாக உலகவங்கி தெரிவிக்கின்றது. இந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழல் குறித்து சமீபத்தில்வாஷிங்டெனில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை இந்த தகவலை தெரிவிக்கின்றது. தன்னுடைய வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு இந்தியா நிதித்துறையில் நிலவும் சமச்சீரற்ற போக்குகளை பெருமளவில் குறைத்துக் கொள்ளவேண்டும் என்றும் உலக வங்கி கூறுகிறது. மாநிலங்களை பொருத்தவரை உற்பத்தி திறன் இல்லாத துறைகளில் செய்யப்படும் முதலீடுகள் பெருமளவு குறைக்கப்படவேண்டும். நஷ்டத்தில் இயங்கும் மாநில அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் அதிகரித்து வருவது பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது. தாராளமயமாக்க கொள்கை வெற்றி பெறுவதற்கு நசிவு நிலையில் இருக்கும் அரசு துறை நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள் பெரிதும் குறைக்கப்படவேண்டும் என்றும் ஆய்வறிக்கை சொல்லுகிறது. பெண்களின் நிலை இந்த ஆய்வறிக்கையில் சுவாரஸ்யமான மற்றொரு விஷயம், பெண்களின் நிலை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துதான். இந்திய பெண்களின் நிலை மிகவும் கவலையளிக்கக்கூடிய விதத்தில் தற்போது உள்ளதாக உலகவங்கி கூறுகிறது. ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான இந்திய பெண்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாகவும், ஊட்டச்சத்து இல்லாதவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிராக காட்டப்படும் ஓர வஞ்சனையான மனப்பான்மை, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய தடைக்கல்லாக இருப்பதாகவும் ஆய்வறிக்கை கவலை தெரிவிக்கிறது. இந்த நிலைமை சீர்ப்படுத்தப்படாவிட்டால் எந்த வளர்ச்சி பணியும் அதன் முழுபலனை நமக்கு அளிக்கமுடியாது என்று உலக வங்கி உறுதியாக கூறுகிறது. மின்சார வாரியங்கள் தாராளமயமாக்க பொருளாதார கொள்கை வெற்றி பெற மற்றுமொரு அடிப்படை விஷயமாக இந்த ஆய்வறிக்கை தெரிவிப்பது, இந்தியாவின் தற்போதைய மின் உற்பத்தி நிலைமை தான். மிக மிக அதிக அளவில் அதிகரித்து வரும் மின் பற்றாக்குறையும், மின் விநியோகமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கற்பனை செய்து பார்க்கமுடியாததொரு அபாயத்தை உருவாக்கியுள்ளதாக ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. நிலைமையை சீர்ப்படுத்த மாநில மின்வாரியங்கள் முழுவதுமாக சீரமைக்கப்படவேண்டும். மின் கட்டணம் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைக்கப்படவேண்டும். மின் உற்பத்தியிலும், மின் விநியோகத்திலும் தனியார் ஈடுபட அனுமதிப்பது, இன்றைய சர்வதேச பொருளாதார சூழலில் இன்றியமையாதது என்பதை இந்தியா உணரவேண்டும். இந்திய நகரங்களை மனிதர்கள் வாழக்கூடிய நகரங்களாக மாற்றியமைக்க, அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துதல், சேவைத்துறைகளில் செம்மையான முறைகளை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை உலகவங்கி ஆராய்ந்து வருவதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. |
|